Wednesday, 10 January 2018

வெட்கம் பூசி அமர்ந்தவளுக்கு, பேரின்பத்தையும்,
சுடுகனல் வெயிலில் வறண்ட
மொட்டை நிலத்தை பார்த்தலில்
வேதனையையும்..
யாருமில்லா நடுநிசி இரவில்
வேசிக்கு..
சிறிது ஆசுவாசத்தையும்,..
விலா எலும்பு நோக எடை நகர்த்தி
வருபவனுக்கு எதிர்பார்ப்பையும்..
வீரிட்டு அழும் குழந்தைக்கு
மனக்கீறும் பயத்தையும்...
இன்னும் பலருக்கு ஏதோவொன்றையும்
கொடுத்துச் செல்கிறது...
அந்த ஒரு "தனிமை...!!!"

 சு.இந்துமதி..

அடர்கருகூந்தலில் எட்டிப்பார்க்கும்
ஒற்றை வெள்ளைமுடி தனிமையை
பெருங்கூட்ட சாபத்தில்
பெறும்வேளையில் சில்லிட்ட
சாரல்காற்றில் கண்களில் கசந்த
பசியில் தேநீர் குடிக்க
கசப்பு நாக்கிற்கு இடமாற
தேர்ந்த விதியை திறமையாய்
திட்டி மிச்சம்
வையாமல் மிடற்றை விழுங்குகிறேன்..
சிறுகடியில் ஒருகடி இனிக்க..
முழுத்தேநீருக்கும்
இனிப்பைக்கொட்டி சென்றது..
நாக்கில் நழுவிய எறும்பு..


சு.இந்துமதி, தென்னம்புலம்..
என் பைத்திய நிமிடங்களை ருசிக்கும் பேரமைதியில்
கல் வீச எத்தனிக்கிறேன்...
நினைவின் தூறல்கள்
பூமழை பொழிகிறது என்னில்.!!!

சு.இந்துமதி, தென்னம்புலம்.
உனக்கும் எனக்குமான ஊடலில் நம்
மௌனங்கள் சத்தமிட்டு அழுகின்றன..

என் அலைபேசியும் தவங்கிடக்கின்றன
உன் அழைப்பினை எதிர்பார்த்து..

கனவுகளும் உன்னைச்சுற்றியே
படையெடுக்கின்றன..

தேநீர் கோப்பைகளும் உன்னை
நிரப்பியே என்னிடம் வருகின்றன..

என் குளிரை  நினைவுகளை மூட்டி
காய்கிறேன்...

என் நீளும் இரவில் சத்தமிட்டு
கத்துகின்றன... மனத்தவளைகள்...

எங்கோ அடர் இரவில்  எனக்கும் சேர்த்து ஓலமிடுகிறது அந்த நாய்.. ....!!!
 


சு.இந்துமதி, தென்னம்புலம்